tamilnadu

img

பொதுத்துறை பங்குகளை ஏலத்தில் விற்கும் மத்திய அரசு!

நிதிப்பற்றாக்குறையை சரி செய்யும் விதமாக மத்திய அரசு தன்வசம் உள்ள ரைட்ஸ் (RITES) நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை பொது ஏலத்தில் விற்பனை செய்து சுமார் 700 கோடி ரூபாய் நிதி திரட்டி அதன் மூலம் நிதிச்சுமையைக் குறைக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே துறையின் அங்கமான ரைட்ஸ் (Rail India Technical and Economic Service) நிறுவனம், மத்திய அரசின் வசமுள்ள பொதுத்துறை நிறுவனமாகும். இந்திய ரயில்வே துறைக்கு பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆலோசனைகள் வழங்குவது, அதோடு கட்டுமானத் துறையிலும் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடந்தது. பங்கு வெளியீட்டின் மூலம் சுமார் 12.60 சதவிகித பங்குகள் அதாவது 2.52 கோடி பங்குகள் வெளியிடப்பட்டன. அதில், பங்கு வெளியீட்டு அளவைக் காட்டிலும் 67 மடங்குகள் அதிகமாக இருந்தது. இதை அடுத்து ரைட்ஸ் நிறுவன பங்கு வெளியீடு அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் மத்திய அரசுக்கு சுமார் ரூ.466 கோடி திரட்டப்பட்டது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அன்று ரூ.185 என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவில் ரூ.190 என்ற அளவிலேயே வர்த்தகமானது. இருந்தாலும் ரைட்ஸ் நிறுவனத்தின் பங்கானது இதுவரையிலும் சுமார் 15 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. 

இந்நிலையில் நிறுவனத்தின் நிதிப்பற்றாக்குறையை போக்கும் விதத்தில் மத்திய அரசு தன் வசம் உள்ள 87.40 சதவிகித பங்குகளில் இருந்து சுமார் 15 சதவிகித பங்குகளை ஏல முறையில் (Offer for Sale-OFS) விற்பனை செய்ய ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஏலமுறையில் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 700 கோடி ரூபாய் திரட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக ரைட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை நிர்வகித்து வரும் முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத் துறை (Department of Investment and Public Asset Management-DIPAM) தெரிவித்துள்ளது.

இது குறித்து விவாதிக்க வணிக வங்கிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தன்வசம் வைத்துள்ள ரைட்ஸ் நிறுவனத்தின் 87.40 சதவிகித பங்குகளில் இருந்து 15 சதவிகித பங்குகளை விற்பதை அடுத்து அதன் பங்குகள் 72.40 சதவிகிதமாக குறைந்து விடும். ரைட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஏலமுறையில் விற்கப்போவதாக செய்திகள் வந்ததை அடுத்து மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குகளின் விலை சுமார் 1.60 சதவிகிதம் சரிவை சந்தித்தது.

நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் பங்குகளை விற்பனை இலக்கு ரூ.9000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (Rail Vikas Niam Ltd) பங்கு வெளியீட்டின் மூலம் சுமார் ரூ.2350 கோடி திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


;